அன்பின் வெளிப்பாடு

அன்பின் வெளிப்பாடு
Photo by Larm Rmah / Unsplash

தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த அஷ்வின் தற்பொழுது அமெரிக்காவிலுள்ள சான்ஃப்ரான்சிஸ்கோ நகரின் “சிலிகான் வேலி” என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் முதுநிலை தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிகிறார். ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு இரு பிள்ளைகளுக்குத் தந்தையாகி அமெரிக்க குடியுரிமையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அஷ்வினின் வயதான பெற்றோர்கள், சேலத்திலேயே அவர்களின் சொந்த கிராமத்தில் வசித்து வந்தனர். அஷ்வின் அவர்களிடம் வாட்ஸாப் மூலம் பேசி வந்தார். ஆனால், தற்பொழுது அவரது பெற்றோர்களுக்கு வயதாகிவிட்டதால், அவர்களையும் அமெரிக்காவிற்கே அழைத்துச் சென்றுவிட்டார்.

அஷ்வின் தற்பொழுது குடும்பத்துடன் வசித்துவரும் நிலையில், ஒரு நாள் மாலை வேளையில், காரில் குடும்பத்துடன், தன் வயதான பெற்றோர்களுடன் அருகிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு “ஷாப்பிங்” செய்யச் சென்றிருந்தார். ஷாப்பிங் முடிந்த பிறகு அஷ்வின், தள்ளுவண்டியில் இருந்து வாங்கியப் பொருள்களை காரின் பின் பகுதியில் நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது “கார் பார்க்கிங்” பகுதியில், ஒரு வெள்ளைக்கார பெண்ணும் பையனும் “அமெரிக்கப் பாணியில்” முத்தங்களைப் பரிமாறிக் கொண்டிருந்ததைப் பார்த்த அஷ்வினின் அப்பா, “டேய் அஷ்வின், என்னடா இது? பொதுவெளியில் இப்படிச் செய்கிறார்களே...?” என அதிர்ச்சியுடன் கேட்டார். அதற்கு அஷ்வின், “அப்பா...இதெல்லாம் இங்கு சகஜம், “அன்பின் வெளிப்பாடு” கண்டுக்காதீங்க” என வெகு இயல்பாகக் கூறினார். “ஓ அப்படியா....அன்பின்வெளிப்பாடா இது...?” என அவர் அப்பாவியாகத் தலையசைத்தார்.

ஷாப்பிங் முடிந்து வீடு திரும்பினர். இரவு உணவிற்குப் பிறகு, அஷ்வினின் மனைவி மற்றும் அவர் பிள்ளைகள் உறங்கச் சென்றுவிட்டனர். மற்றொரு அறையில் “க்ளைண்ட் மீட்டிங்” என அஷ்வின் மடிக்கணினியில் மூழ்கினார்.

அவர் பெற்றோர்கள் வரவேற்பு அறையில் தொலைக்காட்சியில், தமிழ் சேனலை மாற்றத் தெரியாத காரணத்தினால், ஏதோ ஒரு ஆங்கில இசைச் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தொலைக்காட்சித் திரையில் ஓடிக்கொண்டிருந்தக் காட்சி, இன்று மாலையில் அவர்கள் கார் நிறுத்துமிடத்தில் கண்டது போலவே, இருவர் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். அப்போது அஷ்வினின் அப்பா, அவரது மனைவியின் கண்களைப் பார்த்தார். அஷ்வினின் அம்மா பயந்தவாறே மிரட்சியுடன் அவரைப் பார்த்தார். அவர் மனைவி பயந்தபடியே அது நடந்துவிட்டது. ஆம், அவர் தன் மனைவி மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக “அமெரிக்கப் பாணியில்” முத்தமிட்டார். பின்னர் அஷ்வினின் அப்பா, தன் வாயில் ஏதோ தட்டுப்படுகிறதே என அவர் வாயில் கை வைத்துப் பார்க்க, அது அவரது மனைவியின் வாயில் பொருத்தப்பட்டிருந்த செயற்கைப் “பல் செட்”. இப்போது அவர் வாயில் கவ்வியப்படி இருந்தது. அஷ்வினின் அம்மா, “ஞே...ஞே...என்று பொக்கை வாய்” சிரிப்புடன் நாணத்துடன் “ச்ச்சீ...போங்க” எனக் கூறி தலைக்குனிந்தார். இப்படியாக இவர்களின் அன்பு அமெரிக்காவில் வெளிப்பட்டது.